சிங்கம் பட பாணியில் திருட்டு - சாமி கும்பிடுவதுபோல வந்து கோயிலில் கொள்ளை; திருடர்கள் எஸ்கேப்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 9:40 AM IST
Highlights

சிங்கம் பட பாணியில் சாமி கும்பிடுவதுபோல வந்து கோயிலில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

சிங்கம் பட பாணியில் சாமி கும்பிடுவதுபோல வந்து கோயிலில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களை  காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேவுள்ளது மணலி. இங்குள்ள சாத்தங்குடி சாலையில் கண்ணாயிரமூர்த்தி ஐயனார் கோயில் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட காரில் குடும்பம் ஒன்று வந்தது. அதில், இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தனர்.

இவர்கள் கோயிலில் யாரும் இல்லாததை அறிந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த ஐந்து கிலோ பித்தளை மணி, குடம், கைமணி, ஒலிப்பெருக்கி, குத்துவிளக்கு, தொங்குவிளக்கு என மொத்தம் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

நேற்று கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் ஆனந்தபத்மநாபன், உதவி ஆய்வாளர் வல்லவராணி மற்றும் காவலாளர்கள். 

அங்கு தடவியல் நிபுணர்களை வரவழைத்து திருடர்களின் கைரேகை எதாவது பதிந்துள்ளதா? என்று ஆராய்ந்தனர். பின்னர், கோயிலின் வெளியில் உள்ள காரின் டயர் தடத்தை பதிவெடுத்துக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் திருடர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் கோயிலுக்குள் சாமி கும்பிடுவதுப் போல நுழையும் குடும்பம் நகைகளை திருடிக் கொண்டு காரில் தப்பிக்க பார்க்கும். அப்போது சூர்யா வந்து அவர்களை அடித்துபோட்டு கைது செய்து சாமி நகைகளை மீட்பார். 

இந்த திருட்டுக் கும்பலும் கோயிலுக்கு சாமி கும்பிடுவது போல வந்து கோயில் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். சிங்கம் சூர்யா போன்று திருடர்களை கண்டுபிடித்து கைது செய்யுமா காவல்துறை? 

 

சாமி கும்பிடுவதுபோல வந்து கோயிலின் உள்ளே இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை  திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!