
திண்டுக்கல்
ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தொட்டிமடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெருமாள் புதூர் அருகே உள்ளது சண்முகம் பாறை. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொட்டி மடை நீர்வீழ்ச்சி.
சண்முகம் பாறையில் இருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் தேக்கு, தென்னை, வாழை மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சியளிகும்.
பழனி நகரில் நிலவும் வெப்பநிலை துளியும் இல்லாமல் அந்தப் பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசும். இப்படி இதயத்தை கவரும் விதமான சூழ்நிலை நிலவும் இந்தப் பகுதிக்குச் செல்கிற சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு மூலிகை செடிகளை கடந்து வருகிறது. இதனால் அந்த நீர் சுவையாக உள்ளது. அதில் குளிப்பவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன், மனதுக்கும் அமைதி கிடைப்பதாக அங்கு குளியல் போட்ட சிலர் தெரிவித்தனர்.
தொட்டிமடை நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அம்மாபட்டிகுளம், குமாரசமுத்திரகுளம், உடைய குளம், அதிகாரி குளம் உள்பட நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் செல்கிறது. இதனால் அந்த குளங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த நீர்வீழ்ச்சி விளங்குகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: "மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள கரடுப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தோன்றுகிறது. அங்கிருந்து பெருக் கெடுக்கும் தண்ணீர் அடிவார பகுதியில் இயற்கையாக தொட்டிபோல் அமைந்த இடத்துக்கு வந்து அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் கொட்டும். மழைக் காலங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு தண்ணீர் கொட்டும்.
எனவே, தொட்டிமடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். சுற்றுலா பயணிகளுக்கும் இயற்கையின் அழகை முழுமை யாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.
தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் அங்கு குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீரில் குளித்து மகிழலாம். ஆனால் அப்பகுதி யில் வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கும். குறிப்பாக யானைகள் கூட்டம், கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக அங்கு அடிக்கடி வரும் என்பதால் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நன்று.