
தருமபுரி
தருமபுரியில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மீது தனியார் கல்லூரி பேருந்து பயங்கரமாக மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால், சிறுவனது உறவினர்கள் மீளா சோகத்தில் மூழ்கினர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது அனுமந்தபுரம் ஊராட்சி. இங்குள்ள முனியப்பன் கோவில் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ரத்னா. இவர்களுக்கு நித்யா, ஜீவானந்த், யஷ்வந்த் ஆகிய மூன்று பிள்ளைகள்.
இதில், யஷ்வந்த் (6) என்பவர் அனுமந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நித்யா, ஜீவானந்த், யஷ்வந்த் ஆகியோர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முனியப்பன் கோவில் அருகே வந்தபோது பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஒன்று யஷ்வந்த் மீது வேகமாக மோதியது. இதில் யஷ்வந்த் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர், ஆனாலும், சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாலக்கோடு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாலக்கோடு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.