
தருமபுரி
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நல்லம்பள்ளி ஒன்றியச் செயலர் என். பி. ராஜூ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தலித் மக்களின் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிதியை உயர்த்த வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வீடு இல்லாதவர்களுக்கு எட்டு சென்ட் பரப்பளவில் வீட்டுமனை வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை 200-ஆகவும், ஊதியம் ரூ. 400-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இராமலிங்கம், என்.முருகேசன், ஒன்றியச் செயலர்கள் மாதையன், பச்சாக்கௌண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.