
புதுக்கோட்டை
ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் தொழிலார்கள் அலைக்கழிக்கப்படுவதால், சோத்துக்கு கூட வழியில்லை என்று விவசாய தொழிலாள்ரகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
“புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் அரசு அறிவித்த 150 நாள் வேலை அமல்படுத்தப்படவில்லை.
சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரூ.203 கூலியும் வழங்கப்படவில்லை.
செய்த வேலைக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மருதப்பா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பக்கிரிசாமி கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது:
“விவசாய தொழிலாளர்களின் நிலையை அரசு புரிந்து கொள்ளவில்லை.
வறட்சியின் காரணமாக 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி அரசு அறிவித்தது. ஆனால், இது பெரும்பாலான ஊராட்சிகளில் அமல்படுத்தவில்லை.
அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்தே விவசாய தொழிலாளர்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படி பாவப்பட்ட மக்களின் கூலியை ஆறு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைப்பது கொடுமையான செயலாகும்.
கூலிப் பாக்கியை உடனடியாக செலுத்துவதற்கும், வருடத்திற்கு 150 நாட்கள் வேலை வழங்குவதோடு அரசு நிர்ணயித்த கூலியை குறைக்காமல் வழங்குவதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் துரைச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் தங்கவேல், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பீமராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் சக்திவேல், கோபால்சாமி ஆகியோர் பேசினர்.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து குன்றாண்டார் கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையில் பத்து நாள்களுக்குள் சம்பள பாக்கியை செலுத்துவது, வேலை தளத்தில் குடிநீர், கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, வியாழக்கிழமை வந்தால் தான் இதர நாட்களுக்கும் வேலை என்ற கெடுபிடியை தளர்த்துவது என அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.