
புதுக்கோட்டை
உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச் சாவடிகளை தயார் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் கணேஷ் கலந்து ஆலோசித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன், வாக்குச் சாவடிகளின் வரைவு பட்டியல்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
“புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின் படி வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கு 2 ஆயிரத்து 253 வாக்குச் சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளுக்கு 273 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 526 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
நகர்ப்புற பகுதிகளுக்கு ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு 1 வாக்குச் சாவடியும், ஊரக பகுதிகளுக்கு அதிகபட்சம் 1000 வாக்காளர்களுக்கு 1 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் 663 ஒரு வார்டு வாக்குச் சாவடிகளும், ஆயிரத்து 590 இரு வார்டு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக பகுதிகளில் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 36-ம், பெண்களுக்கான வாக்குச் சாவடிகள் 36-ம், அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடிகள் 2 ஆயிரத்து 181-ம் என மொத்தம் 2 ஆயிரத்து 253 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் நகர் பகுதிகளில் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 53-ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 53-ம், அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடிகள் 167 என மொத்தம் 273 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து அதிகபட்சம் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சியினரின் கோரிக்கையான அதிக வாக்காளர்கள் உள்ள இடங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களின் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வருகிற 7-ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் எழுத்து பூர்வமாக மனு அளிக்கலாம்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா, தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது உள்பட பலர் பங்கேற்றனர்.