
பெரம்பலூர்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்று வாரங்களுக்கும் மேலாக விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எலிக்கறி திண்ணுதல், சட்டி ஏந்துதல், மண்டை ஓட்டு அணிதல், ஒரு பக்கம் மீசை, தலைமுடி எடுத்தல் என்பது போன்ற நூதன வழிகளில் தங்களது போராட்டங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வளவு பாடு பட்டும், கடும் குளிரிலும், வெயிலிலும் டெல்லியில் போராடும் விவசாயிகளை இதுவரை பிரதமர் சந்திக்க வரவில்லை.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் மக்களின் முழு ஆதரவும் உண்டு. மேலும், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மத்திய மோடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு கட்சிகள், விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு வாலிகண்டபுரம் அருகே உள்ள ரோவர் வேளாண் கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மதியம் வரை மாணவ, மாணவிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அளித்தது.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.