
நாட்டின் 69வது குடியரசு தினம் நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜ்பாத்திற்கு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
அப்போது நடைபெற்ற மாநிலங்களின் பெருமையை பறை சாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலாச்சாரத்தை பெருமை படுத்தும் விதமாக, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,பொங்கலிடுவது போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.அந்த வாகனத்தில் தமிழ்நாடு என்பது கூட தமிழில் எழுதாமல்,இந்தியில் எழுதப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த விமானப்படை வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவை கௌரவிக்கும் வகையில், அவரது மனைவிக்கு அசோக் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
முதன்முறையாக இந்திய குடியரசுத் தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது