
சென்னை, நந்தனம் லோட்டஸ் காலனியில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பெண் பலியானார். உடனிருந்த கணவரும் மகனும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தனம் லோட்டஸ் காலனி, 2-வது தெரு, குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மாரி. இவர், முன்னாள் அமைச்சரும் தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான வைத்தியலிங்கத்திடம் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களது மகன் சதீஷ். இன்ஜினியரிங் படித்துவவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் குடியிருக்கும் பகுதியில் பின்புறத்தில் செஃப்டிக் டேங்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதை, தாங்கள் குடியிருக்கும் இரண்டாவது தளத்தில் இருந்து பால்கனி வழியாக, தந்தை மாரி, கிருஷ்ணம்மாள், சதீஷ் ஆகியோர் நின்றபடி பார்வையிட்டுள்ளனர்.
மழை பெய்ததால், ஏற்கனவே பாதிப்பில் இருந்த பால்கனி, திடீர் என இடிந்து முதல் மாடியில் உள்ள பால்கனி மீது விழுந்தது. முதல்மாடி பால்கனி இடிந்து கீழே விழுந்தது.
பால்கனியில் நின்றிருந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த மாரியும், சதீசும் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தந்தை மாரியும், உடல்நிலை மோசமாக இருக்கவே, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சதீஷ், மேல் சிகிச்சைக்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பலத்த காயமடைந்த தந்தை மாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து சைதாப்பேடடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். உயிரிழந்த கிருஷ்ணம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.