
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 % இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 % இட ஒதுக்கீடு செய்யப்பட்ட்தற்கான அரசானையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 27 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 4.2 லட்சம் மாணவர்களுக்கு 85 % உள் இடஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில், 2,594 இடங்களில் 2,203 இடங்கள் மாநில பாட்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும், சுயநிதி மருத்துவ கல்லூரியில் 664 இடங்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஜூலை 17 ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.