
சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் கட்சியும் ஆட்சியும் தங்களிடமிருந்து போய் விடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க நாடகம் நடத்துவதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் துணை போவதாகவும் ஒ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டாலும் ச்சிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் ஒரே அணியாக இணையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் ச்சிகலா சிறைக்கு சென்றது போல் டிடிவி தினகரனும் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்றார்.
இதனால் அணி இணைப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் திடீரென சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் புது அணியை உருவாக்கியதோடு கட்சியில் நீடிப்பேன் என புது குண்டை தூக்கி போட்டார்.
இதை தொடர்ந்து அணி இணைப்புக்கே பேச்சில்லை என ஒ.பி.எஸ் பேச்சுவார்த்தை குளுவை கலைத்தார்.
தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைத்து விட்டதாக எடப்பாடி அமைச்சரவை கூறினாலும் எடப்பாடி வாயில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், தருமபுரியில் ஒ.பி.எஸ் அணியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான கே.பி முனுசாமி கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களையும் அதிமுக தொண்டர்களையும் துணை சபாநாயகர் தம்பிதுரை குழப்பி கொண்டிருப்பதாகவும், சசிகலா குடும்பத்தை வெளியேற்றபட வேண்டும் என்பதே தங்களின் முதன்மையான இறுதியான முடிவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படாத ஒரு அரசாகவே உள்ளதாகவும், இந்த அரசு மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாமலேயே இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் கட்சியும் ஆட்சியும் தங்களிடமிருந்து போய் விடக்கூடாது என்பதற்காக நாடகத்தை நடத்திகொண்டிருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியும் அந்த நாடகத்திற்கு துணை போவதாகவும் குறிப்பிட்டார்.