
அம்பத்தூர் பகுதியில் உள்ள ஆசிரியர் வீட்டில் 52 சவரன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்த வாலிபரை, ஒரே வாரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் விரிவு முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் குமார் (40). திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சர்மிளா (35). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்களுடன் சர்மிளாவின் தாய் பத்மினியும் வசிக்கிறார்.
கடந்த 17ம் தேதி மதியம் சர்மிளா, அவரது தாய், குழந்தை ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை பூட்டவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, உள்ளே நுழைந்த மர்ம நபர், படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
அனைவரும் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
புகாரின்பேரில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், கந்தகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அம்பத்தூர் பகுதியில் நேற்று காலை தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் சுற்றி திரிந்தார்.
போலீசாரை கண்டதும், அவர் அங்கிருந்த தப்பியோடினார். உடனே போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் விசரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி தெருவை சேர்ந்த பிரதீப் (22) என்றும், கடந்த 17ம் தேதி, சர்மிளா வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி, ஒரு வீட்டில் மறைத்து வைத்திருந்த 52 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரதீப் மீது பட்டாபிராம், திருவள்ளூர், அமைந்தகரை உள்பட பல பகுதிகளில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரியவந்தது. இதையடுத்து, அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.