
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு மீறி அள்ளப்படும் மணலால் நீர் ஊற்றே இருக்காது இதில் ஆழ்துளை கிணறு அமைத்து வறண்ட பூமி ஆக்குவதா?. என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி, நெ.1 டோல்கேட்டை அடுத்து தாளக்குடி கிராமத்திற்கு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் ஊரக பேரூராட்சி மற்றும் 116 வழியோர குடியிருப்புகளுக்கான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் நீர் ஊற்று குறைவு ஏற்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூறு மீட்டர் தொலைவில் 5 சிறிய அளவிலான ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அவற்றை ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றில் இணைத்து அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழக அரசின் வறட்சி நிவாரண நிதியுதவி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு முடிவு செய்து அதற்கான பணி ஒப்பந்தத்தை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கியது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். இதனை அறிந்த தாளக்குடி கிராம மக்கள் ஒன்றாக திரண்டு அங்கு சென்று, இங்கு ஏற்கனவே ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். ஆகையால் வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு பணியாளர்கள், எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பணியாளர்களை முற்றுகையிட்டு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், பணியாளர்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு அங்கிருந்துச் சென்றனர்.
“ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவு வரை மணல் அள்ளக் கூடாது. இருப்பினும் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் நீர் ஊற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் எங்கள் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலவி வருகிறது.
இந்நிலையில் இங்கு மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க விடமாட்டோம், என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.