
இட்டமொழி
இட்டமொழியில் தாகம் தீர்த்துக் கொள்ள ஊருக்குள் வந்த புள்ளி மான் கம்பிவேலியில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தது.
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் வாகைநேரி கிராமம் உள்ளது. இங்குள்ள காளியப்பன் என்பவர் தோட்டம் அருகில் நேற்று முன்தினம் இரவில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தது.
அந்த பகுதியில் சென்றவர்கள் புள்ளிமான் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக குரும்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனக்காப்பாளர் ரத்தினம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கிடந்த புள்ளிமானை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இட்டமொழி அருகே உள்ள தேரி வனப்பகுதியில் இருந்து ஒரு வயது நிரம்பிய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் நடமாடி வந்துள்ளதை சிலர் பார்த்துள்ளனர்.
அந்த புள்ளிமான் வயல் பகுதிக்கு வந்தபோது, அங்கிருந்த கம்பிவேலியில் மானின் கொம்பு சிக்கியதால் அதன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கு இருந்து சிறிது தூரம் சென்று தோட்டத்தின் அருகில் துடித்துடித்து இறந்துள்ளது என்று தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் உடலை புதைத்தனர்.