
தென்காசி
குடியிருப்பு பகுதியில் மற்றும் பெண்கள், மாணவிகள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதி என்பதால் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என்று உதவி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தென்காசி உதவி ஆட்சியர் வெங்கடேசிடம், நேற்று பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “தென்காசி கீழப்புலியூர் இரயில் நிலையத்தில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் பிரதான சாலையில் பொதுமக்களின் குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள், பள்ளி, மாணவிகள் விடுதி ஆகியன உள்ளன.
இப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் அதிகமாக செல்லும் பகுதியாகும்.
இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும். பாதுக்காப்பும் கேள்விக் குறியாகி விடும். எனவே, இங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர செயலாளர் செய்யது முகம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜலால் மைதீன், த.மு.மு.க முகம்மது கோயா, மதரஸா தலைவர் முஸ்தபா, இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிர் அலி உள்பட பலர் இந்த மனுவை அளிக்கும்போது உடனிருந்தனர்.