
கண்டமனூர்
ஆண்டிப்பட்டி அருகே, நவீன பாதுகாப்பு அம்சங்களும், கூடவே நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, கழிப்பறை, குளியலறை அடங்கிய மாவட்ட சிறைச்சாலைக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மாவட்ட சிறைச்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஆண்டிப்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கான கட்டுமான பணிகள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 250 கைதிகளை அடைத்து வைக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, கழிப்பறை, குளியலறை ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சுற்றுச்சுவர்கள், மூன்று உயர்நிலை பாதுகாப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலைக்கான கட்டுமான பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து சிறைச்சாலை செயல்பாட்டுக்கு வந்தால் மதுரை மத்திய சிறைக்கு கைதிகளை கொண்டு செல்லும் அவசியம் ஏற்படாது.