
மதுக்கூர்
வழக்கு ஒன்றில் கைதானவரின் செல்போனை திருப்பி கேட்டபோது ரூ.5000 இலஞ்சம் கேட்ட காவல் ஏட்டு, அதனை வாங்கும்போது மாட்டி கொண்டார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (52). இவரை வழக்கு ஒன்றில் மதுக்கூர் காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவித்தனர்.
அப்போது, கைது செய்யும்போது, விஜயகுமாரின் செல்போனை மதுக்கூர் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த சேரன் பறித்து வைத்துக் கொண்டார்.
ஜாமீன் கிடைத்தபின்பு, தனது செல்போனை விஜயகுமார் திருப்பிக் கேட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விஜயகுமார் தனது சகோதரர் சிங்காரவடிவேலனிடம் தெரிவித்துள்ளார். அவர் காவல் நிலையத்துக்குச் சென்று ஏட்டு சேரனிடம் செல்போனை திருப்பி கேட்டார்.
அப்போது, ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தால் செல்போன் தருகிறேன் என லஞ்சம் கேட்டுள்ளார் சேரன். ஆனால், செல்போனை பறித்து வைத்துக் கொண்டு, திருப்பிக் கேட்டால் லஞ்சம் கேட்பதா? என்ற கேள்வியுடன் இலஞ்சம் கொடுக்க மனமில்லாமல் தயர் செய்கிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்..
பின்னர், சிங்காரவடிவேலன் தஞ்சை இலஞ்ச ஒழிப்பு காவலில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இலஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, வெங்கடேசன் மற்றும் காவலாளர்கள், சிங்காரவடிவேலனிடம் இரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.
அதன் பேரில் சிங்காரவடிவேலன் இரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மதுக்கூர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அப்போது அங்கு காவல் ஏட்டு சேரன் இல்லை. அவர் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சிங்காரவடிவேலன் அங்குச் சென்று பணத்தை சேரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான காவலாளர்கள் சேரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை காவலாளர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.