
தேனி
தேனி மாவட்டத்தில், தமிழக அரசு ஒதுக்கிய வறட்சி நிவாரணம் போதவில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 205 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,
விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
தேனி மாவட்டத்தில், தேனி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது.
தேனியில் நடந்த மறியலுக்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
நேரு சிலை சிக்னலில் நடத்தப்பட்ட இந்த மறியல் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த மறியலில் ஈடுபட்ட 28 பேரை காவலாளர்காள் கைது செய்தனர்.
போடியில் தேவர் சிலை அருகில் சாலை மறியல் நடந்தது. மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் தலைமை வகித்தார். மறியல் செய்த 14 பெண்கள் உள்பட 62 பேரை காவலாளர்காள் கைது செய்தனர்.
உத்தமபாளையத்தில் தேரடி திடலில் சாலை மறியல் நடத்தப்பட்டது. மறியலுக்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் 17 பெண்கள் உள்பட 85 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பெரியகுளம் மூன்றாந்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடந்த இந்த மறியலில் மொத்தம் 205 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.