
கடலூர்
கடலூரில், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது கோடங்குடி கிராமம். இந்த கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோபம் கொண்ட கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து சிறுகுறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் நேற்று கோடங்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர், அவர்களில் பலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்,
கிராமப்புற தார் சாலையை மேம்படுத்த வேண்டும்,
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் போராட்டம் நடத்தினர்.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் ஏராளமான பெண்கள் வெற்றுக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் செல்வி, காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையேற்ற கிராம மக்கள் மற்றும் சிறுகுறு விவசாய சங்கத்தினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.