அதிமுக பொதுக்குழு செல்லுமா..? செல்லாதா..? புதிய நீதிபதி முன்னிலையில் தொடங்குகிறது விசாரணை

By Ajmal KhanFirst Published Aug 8, 2022, 9:42 AM IST
Highlights

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில்  இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது

பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அ.தி.மு்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்,  என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு,  எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும்  சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

சசிகலா,தினகரனுடன் இணைந்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்..? திடீர் விளக்கம் அளித்த தேனி மாவட்ட செயலாளர்

உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்த்ரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்  என கோரப்பட்டிருந்தது. அதன் படி கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது அதிமுகவில்  தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற status quo உத்தரவை பிறப்பிக்கலாம் என தெரிவித்ததோடு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என கூறினர்.

அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் வீழ்த்துவோம்... எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

புதிய நீதிபதி முன்னிலையில் விசாரணை

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. 2 வாரத்தில் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் வழக்கு விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இப்போ தண்டனையை அனுபவிக்கிறாங்க.. OPSஐ மறைமுகமாக விமர்சித்த? டிடிவி.தினகரன்.!

 

click me!