
காஞ்சிபுரம்
கோவிலுக்குச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் போலீஸ் போல நடித்து ஏமாற்றி 21 சவரன் நகையை பறித்துச் சென்ற திருடர்கள் இருவரை காவலாளர்களி தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம், கௌரிவாக்கம், சாந்தி நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பட்டாபி சீனிவாசன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (65).
இவர், நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்மநபர்கள் அவரிடம், “நாங்கள் போலீஸ்காரர்கள். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் நடக்கிறது” என்று கூறி விஜயலட்சுமி அணிந்து இருந்த 21 சவரன் நகைகளை கழற்றி வாங்கியுள்ளனர். அதை ஒரு காகித தாளில் மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.
விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அந்த காகித தாளைப் பிரித்து பார்த்தபோது அதில் நகைகளுக்கு பதிலாக செங்கல் துண்டுகள், மண் இருப்பதை கண்டு அதிர்ந்தார். அதன்பிறகுதான் தெரிந்தது திருடர்கள்தான் போலீஸ் போல் நடித்து தன்னிடம் இருந்த 21 சவரன் நகையை அபேஸ் செய்துள்ளனர் என்று.
நகையை காகித தாளில் மடித்துக் கொடுப்பது போல நடித்து நூதன முறையில் திருடிச் சென்றவர்களைப் பற்றி சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் வழக்குப்பதிந்து நகையை திருடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.