
சென்னையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில்,மாலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்யதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பச் சலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
ஈக்காட்டுதாங்கல், பம்மல், அசோக்நகர், கே.கே.நகர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை,தண்டையார் பேட்டை, தாம்பரம்,பல்லாவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்த நிலையில் , பின்னர் விடிய,விடிய சாரல் மழை பெய்தது.
இதனால் சென்னை நகரம் முழுவதும் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.
இதே போன்று திருவள்ளூர், பொன்னேரி பகுதிகளிலும், காஞ்சிபுரம்,வாலாஜாபாத், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விடிய விடிய சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; இரவில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.