ஆந்திர மாநிலம் புது பகுதியில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
திருப்பதிக்கு தேர்வெழுத சென்ற மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள ஏராளமான மாணவர்கள் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் நடைபெற்ற சட்ட கல்லூரி தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத சென்றுள்ளனர். காலையில் தேர்வு எழுத சென்றவர்கள் மாலையில் தமிழகத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது புத்தூர் அருகே உள்ள எஸ் பி புரம் டோல்கேட் அருகே உள்ள டோல்கேட்டில் பாஸ்ட் ட்ராக் இல்லாத காரணத்தால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். 70 ரூபாய் கட்டணத்திற்கு 140 ரூபாய் கட்டணம் கட்ட தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்
இதன் காரணமாக மாணவர்களுக்கும் டோல்கேட் உள்ளவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டோல்கேட்டில் உள்ளவர்கள் அருகில் இருந்த பொதுமக்களும் தமிழக மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தமிழர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் உறவினர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் அமைப்புகள் கண்டனம்
இது தொடர்பாக பல்வேறு அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆந்திர காவல்துறையினர் தடுக்க முனையாமல் இனரீதியாக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் எங்களது வேலையா..?, தமிழர்களுக்கு ஆந்திராவில் என்ன வேலை..? என கேள்வி எழுப்பி இங்கு வந்தால் இப்படி தான் நடக்கும் என தெரிவித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். எனவே ஆந்திராவில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர அரசை வலியுறுத்துவதோடு அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.