
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை ஆகிய பொருட்கள் கட்டுப்பாட்டு பொருட்கள் என்ற பெயரில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 10 கிலோவும் புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 70-30 என்ற விகிதத்தில் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிடங்கு பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், இந்திய உணவு கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் ரேஷன் அரிசி பெறப்படுவதாகவும் அதே விகிதத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தவறும்பட்சத்தில் கிடங்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.