
தமிழ் திரையுலகம் பாதுகாப்பு இல்லாத துறையாக மாறிவிட்டது என்றும், இனியும் கந்து வட்டி கொடுமை தொடரக் கூடாது என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமார், மதுரையைச் சேர்ந்தவர். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியு, இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசோக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அவர் ஆட்களை வைத்து மிரட்டுகிறார். மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக்குமார், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இயக்குநர் அமீர் பேசும்போது, சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள். பாதிப்பு குறித்து யார் வெளியே சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை மாறிவிட்டது என்று கூறினார். கறுப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் இனியும் கந்து வட்டி கொடுமை தொடரக் கூடாது என்றும் கூறினார். சினிமாத் துறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் தான்.
திரைப்படத்தில் ஏராளமானோர் தற்கொலை செய்கின்றனர். தமிழ்த் திரையுலகில் இதுபோல் இனி நீடிக்கக் கூடாது என்றார். பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு யாரும் இல்லை என்ற மனநிலைக்கு வரக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசி தீர்வு காண வேண்டும். கடன் வாங்கித்தான் திரைப்படம் எடுக்கிறோம். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றார். நடிகர் கமலை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் பேசக்கூடாது. கமல் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.