
அரசின் மடிக்கணினி கொடுக்க மாணவர்களிடம் பணம் வாங்கிய பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகிகே முள்ளங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி பள்ளிக்கு வந்தது.
இதையடுத்து, சென்ற வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்தது பள்ளி நிர்வாகம். பின்னர் அவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டது. அப்போது, மாணவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு ஆசிரியர்கள், வண்டி வாடகை கொடுக்கணும், அதற்காக பணம் வசூலிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடமும் 200, 300, 500 ரூபாய் வெவ்வெறு வசூல் செய்கிறீர்கள் என்று மாணவர்கள் கேட்டதற்கு, அதுக்கு ஆசிரியர்கள் லேப்டாப் வேணும்னா பணம் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்கன்னு கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டாங்க என்று மாணவர்கள் கூறினர்.
இதனிடையே மாணவர்கள் எடுத்த புகைப்பட ஆதாரம் ஒன்று வாட்ஸ் அப் மூலம் வைரலாக பரவ ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்தில்வேல் முருகன், சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு செய்தார். விலையில்லா மடிக்கணினி வழங்க மாணவர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக துறை ரீதியான விசாரணையை நடத்தி வருகிறோம் என்றும் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.