
தேனியில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
சரவணன் சுருளி என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கான வட்டி தற்போதுவரை ரூ.3.5 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சுருளி, கடன்தொகையை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சரவணன் மிகுந்த மன வேதனையடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சரவணன் அவரது மனைவி சுதா, 14 வயது மகள் வைஷாலி, 12 வயது மகள் வைஷ்னவி ஆகியோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இதை காலையில் பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதையடுத்து கடன் கொடுத்த சுருளி மற்றும் அவரது நண்பர் காளியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.