
ஒன்றரை வயது குழந்தைக்கு சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தையான முகமது மகிரினுக்கு தற்போது 1½ வயது ஆகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுவன் வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த 'டியூப்' இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்.
குழந்தையின் அழுகிய வலது கை
அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தையான முகமது மகிரினுக்கு இரண்டு கையிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு ஐசியூவில் வைத்து கண்காணிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 29 ஆம் தேதி குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம் ஒரு பிரச்சனையும் இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது.
வலது கை முழுவதுமாக அகற்றம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜிஷா, நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார். குழந்தை முகமது மகிரினை பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது.செவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணையை தொடங்கிய மருத்துவ குழு
இதனிடையே குழந்தையின் கை அழுகுவதற்கு காரணம் தவறான சிகிச்சையா அல்லது மருத்துவ பணியாளர்களின் கவனக் குறைவா என்பது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இன்று விசாரணை தொடங்கியுள்ள நிலையில் 3 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
செல்பி மோகத்தால் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி 2 இளைஞர்கள் பலி