MK STALIN : கர்நாடக அரசிற்கு செக் வைக்க திட்டம் போட்ட ஸ்டாலின்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு திடீர் அழைப்பு

By Ajmal Khan  |  First Published Jul 15, 2024, 1:51 PM IST

தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். 


தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா

தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

Tap to resize

Latest Videos

அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ

கர்நாடக செயல்- அதிர்ச்சியளிக்கிறது

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

ஸ்டாலின் கண்டனம்

இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின்அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. 

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எ ன முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க கூடாது.! தமிழகத்தின் உரிமையை தாரைவார்க்கும் திமுக அரசு - விளாசும் ராமதாஸ்

click me!