
நிலம் வாங்க குவிந்த மக்கள்
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும், அந்த வகையில் சிறுக சிறுக சேர்த்த பணத்தை கொண்டு நிலம் வாங்க முயற்சி செய்வார்கள். அப்படி வாங்கும் நிலம் நல்ல நாளில் வாங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பப்படுவார்கள். சுப முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் வாங்குவார்கள். அந்த வகையில் தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே நாளில் டாஸ்மாக் வருவாயை தூக்கி சாப்பிடும் அளவிற்கு பத்திர பதிவு நடைபெற்றுள்ளது.
சிறப்பு ஏற்பாடு செய்த பத்திர பதிவு துறை
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்களகரமான நாளான 10-2-2025 திங்கள்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 10.2.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
ஒரே நாளில் 238 கோடி ரூபாய் வருவாய்
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் 10.2.2025 அன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் இண்டாவது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்