
குறும்படப் போட்டி
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபக்கம் தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் மீதான குற்றங்கள், பெண்கள் மீதான குற்றங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான குற்றங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படப் போட்டி நடத்தப்பட உள்ளது. ''பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த குறும்படப் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த குறும்பட போட்டிக்கான போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜுவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் இணைந்து வெளியிட்டு இருந்தனர்.
இந்த போட்டி எப்படி நடத்தப்படும்?
குறும்படப் போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
1.பொதுமக்கள் பிரிவு
2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பிரிவு
குறும்பட போட்டியின் தலைப்புகள்
1. இணைய மிரட்டல்
2. குடும்ப வன்முறை & வரதட்சணை கொடுமை
3. பணியிட பாலியல் தொல்லை
4. குழந்தை திருமணம் & இளம் வயது கர்ப்பம்
மேற்கண்ட தலைப்புகளில் குறும்படங்கள் இயக்கி அனுப்ப வேண்டும்.
சிறந்த 3 குறும்படங்களுக்கு என்னென்ன பரிசுகள்?
மேற்கண்ட தலைப்புகளில் அனுப்பப்படும் குறும்படங்களில் முதல் இடத்தை பிடிக்கும் குறும்படத்துக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இரண்டாம் பரிசு பெறும் குறும்படத்துக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
மூன்றாம் பரிசு பெறும் குறும்படத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பொதுமக்கள் பிரிவு, மாணவர்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியே முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
இது தவிர சிறந்த குறும்படங்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
இந்த குறும்பட போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2025 ஆகும்.
குறும்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 14.03.2025 ஆகும்.
மேலும் விபரங்களுக்கு: https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.