
கௌரவ விரிவுரையாளர்கள்- சம்பள உயர்வு
தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படாமல் இருப்பதாக கூறி தொடர்ந்து போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், உரிய தகுதியுடன் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அனைவருக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்கக் கூறி உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, தமிழக உயர் கல்வித்துறை நடைமுறைப்படுத்தாததால்,
கௌரவ விரிவுரையாளர் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் பொய்யான விளக்கம் கொடுத்து, அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை ஏமாற்றியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?
உடனடியாக, தமிழக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதிய உயர்வு கோரி நியாயமான போராட்டத்தில் ஈடுபடுகின்ற கௌரவ விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் விதமாக, கல்லூரி முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
ஊதிய உயர்வை உடனே வழங்குக
மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியை, திமுக அரசு எந்த வழிகளில் செலவிடுகிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.