மத்திய அரசிடம் உரிமைகள் பறிபோவதை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை – முத்தரசன் குற்றச்சாட்டு…

 
Published : May 20, 2017, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
மத்திய அரசிடம் உரிமைகள் பறிபோவதை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை – முத்தரசன் குற்றச்சாட்டு…

சுருக்கம்

The Tamil Nadu government does not recognize the loss of rights to the central government - Muttarasan allegation ...

புதுக்கோட்டை

தமிழகத்தை வஞ்சித்து மத்திய அரசிடம் உரிமைகள் பறிபோவதை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், பொன்னமராவதியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த பருவத்தில் மழையின்றி எந்த விவசாயப் பணியும் நடைபெறாததால் வேளாண் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதுகுறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்குப் போதிய நிவாரணம் வழங்கவில்லை.

வறட்சியால் தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய்கள் வறண்டுள்ளன. எனவே வரும் காலங்களில் மழை நீரைத் தேக்கிவைக்க நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். குளக்கரைகளை உயர்த்தி மரங்களை நட வேண்டும்.

மாநில அரசு மக்களுக்கு குடிநீர் தருவதற்குப் பதில் சாராயக் கடைகளை திறப்பதில்தான் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. புதிய கடைகளைத் திறக்கக் கூடாது. படிப்படியாக மதுவிலக்கு என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதுபோல டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.

நீட்தேர்வு, இந்தி திணிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அனைத்து முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தனது உரிமைகள் பறிபோவதை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. இது மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதை உணரவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மேட்டூர் அணையைத் தூர்வாரும் போராட்டம் அறிவித்த வேளையில் அரசு அதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. தூர்வாரும் பணி முறைகேடு இல்லாமல் நடைபெற வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு அஞ்சுகிறது. கிராம மக்களின் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வுகாண உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று அவர் பேசினார். 

அக்கட்சியின் மாவட்டச் செயலர் த.செங்கோடன், மாவட்டத் துணைச் செயலர் ஏனாதி ஏஎல்.ராசு உள்ளிட்டோர் இந்தப் பேட்டியின்போது உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!