
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 121-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
கோடைக் காலத்தை உல்லாசமாய் கண்டுகளிக்க நீலகிரி மாவட்டம் சிறந்த இடமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகைத் தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மே மாதத்தில் நடத்தப்படும் கோடை விழாவின் மணி மகுடமாக மலர் கண்காட்சி விளங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சி சர்வதேச புகழ்பெற்றது.
இந்த ஆண்டு 121-வது மலர் கண்காட்சி நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவிற்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மலர்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது ஹாலந்து நாட்டில் இருந்த கொண்டு வரப்பட்ட துலிப்மலர்கள் மிகவும் அழகாக உள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்ட இருவாச்சி பறவை உருவம் உள்ளிட்ட மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றிபார்த்தார். அப்போது சுற்றுலா பயணிகளை அருகில் அழைத்து நலம் விசாரித்தார். ஏராளமான சுற்றுலா பயணிகள் அவருடன் ‘செல்பி” புகைப்படம் எடுத்து கொண்டனர். சுற்றுலா பயணிகளின் குழந்தைகளுடன் கைகுலுக்கினார்.
மேலும், பூங்காவில் அலங்கார மலர்செடிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்திய வரைபடம், தமிழக அரசு சின்னம், இத்தாலியன் கார்டன், அங்கு பூத்து குலுங்கிய மலர்கள் உள்ளிட்டவற்றை நீண்ட நேரம் கண்டு ரசித்தார்.
இந்த விழாவில் எம்.பிக்களான கே.ஆர்.அர்ஜூணன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் சாந்திராமு, ஆர்.கணேஷ், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பெடி, தோட்டக்கலை துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக், ஆட்சியர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மலர் கண்காட்சியில் சிறப்பம்சமாக 1 இலட்சம் கார்னேசன் மலர்களால் 25 அடி நீளமும் 26 அடி உயரமும் கொண்ட மாமல்லபுரம் கோவில் உருவம் உருவாக்கப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த மலர் கண்காட்சியில் ஆர்கிட்ஸ் மலர்களால் ஆன 5 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் மலர்கண்காட்சியின் நுழைவு வாயில் லில்லி, ஜெரிபரா, இன்கா மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இருவாச்சி பறவை உருவத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஒரு மரத்தில் பறவை அமர்ந்து இருப்பது போன்று மிகவும் அழகாக இந்த அலங்காரம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் டேலியா, பேன்சி, லில்லி, பிகோனியா, டல்பினியம், பிரஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், பால்சம், பெட்டுனியா, வெர்பினா, பிங்டெய்சி உள்பட பல ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. இந்த மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த மலர்செடிகள் அனைத்தும் பூங்கா மலர் மாடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த மலர்செடிகளில் பூத்துள்ள மலர்கள் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. அரசு தவிர்த்து பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான மலர்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மலர்கண்காட்சியின் நிறைவு விழா நாளை மாலை நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் கலந்து கொண்டு சிறந்த அரங்குகள், தனியார் பூங்காக்களுக்கு சுழற்கோப்பை உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார்.