
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றின் வரவு கால்வாயில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்ப்பு தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில கிராமங்களை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றிலிருந்து 4 கி.மீ. தொலைவில் வெளியகரம் பெரிய வரவு கால்வாய் உள்ளது.
மழைக் காலங்களில் ஆற்றிலிருந்து வரும் உபரிநீர், இந்த வரவு கால்வாய் வழியாக வெளியகரத்தில் உள்ள ஏரிக்கு திருப்பிவிடப்படும்.
வெளியகரம் ஏரியில் சேமிக்கப்படும் நீர், வெளியகரம், ஐவி.பட்டடை, கீழ்கால் பட்டடை, திருமலைராஜ்பேட்டை உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு பயன்படுகிறது
இந்த நிலையில், ஆந்திர அரசு வெளியகரம் பெரிய வரவு கால்வாயின் குறுக்கே ஐந்து பகுதிகளில் தடுப்பணைகள் கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
வரவு கால்வாயில் தடுப்பணைகள் கட்டினால் ஏரிக்கு நீர் வரத்தின்றி, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதனால் அந்த பத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வரவு கால்வாயில் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்டும் பகுதிக்குச் சென்று, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தமிழக, ஆந்திர மாநில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது, ஆந்திர அரசு அதிகாரிகளுடன் தமிழக விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இரு மாநில அதிகாரிகளும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், “தடுப்பணைகள் கட்டுவதை கைவிடும் வரை போராட்டம் தொடரும்” என விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இதனையடுத்து, “கட்டுமானப் பணிகளை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.