சாராயக் கடையை அகற்றகோரி முனீசுவரர் கோவில் பூசாரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்...

First Published Jan 6, 2018, 10:21 AM IST
Highlights
The suicide threaten by priest against liquor shop


தஞ்சாவூர்

தஞ்சாவூரில், கோவில் அருகே உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றகோரி முனீசுவரர் கோவில் பூசாரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்  விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே இரண்டாம்புளிக்காட்டில் முனீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த சாராயக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில், முனீசுவரர் கோவிலில் பூசாரியாக உள்ள அழகியநாயகிபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் (45) என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கோவில் அருகே உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்ற மனுவை குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், கலால் துறை அதிகாரிகள் மற்றும் சேதுபாவாசத்திரம் காவலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த மனுவில், இன்றுக்குள் (அதாவது ஜனவரி 6) கோவில் அருகே உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், "செல்போன் கோபுரத்தில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றாததால் கோவில் பூசாரி அருணாசலம் மல்லிப்பட்டினத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று காலை 6 மணிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அந்தப் பகுதியில் மக்கள் கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் கலால்துறை மேலாளர் புண்ணியமூர்த்தி, பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், கலால் தாசில்தார் கோபி, சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் ராசேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வருகிற 22–ஆம் தேதிக்குள் அந்த டாஸ்மாக் சாராயக் கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இந்த தகவல் செல்போன் மூலம் அருணாசலத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மதிய 12 மணிக்கு செல்போன் கோபுரத்தில் இருந்து அருணாசலம் கீழே இறங்கி வந்தார்.

சாராயக் கடை அகற்றகோரி முனீசுவரர் கோவில் பூசாரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!