
மதுரை
மதுரையில் உள்ள தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவன் தற்கொலைக்கு முயற்சி செய்து பலத்த காயமடைந்துள்ளார். இது தொடர்பாக அப்பள்ளியின் கணக்கு மற்றும் தமிழ் ஆசிரியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், தனக்கன்குளத்தைச் சேர்ந்த நாசர் மனைவி ஜெயந்தி. இவர்களது மகன் ஆசிக் பாரதி (17). இவர், மதுரை பைபாஸ் பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த வாரம் பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிக் பாரதி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் தன்வீர், மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பெற்றோர்கள்.
ஆனால், அந்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆசிக் பாரதியின் தாய் ஜெயந்தி, மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பள்ளியின் கணித ஆசிரியர் தன்வீர், தமிழாசிரியர் மணிகண்டன் ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி காவலாளர்கள் நேற்று வழக்குப்பதிந்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.