
மதுரை
இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், காரைக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதி மக்கள் வசதிக்காக அங்குள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை அடுத்தாண்டு முதல் தொடங்க உள்ளோம் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக அருண்பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இருந்த மணீஸ்வரராஜா பதவி உயர்வுப் பெற்று குஜராத் மாநிலத்தில் இயக்குநர் தரத்திலான அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியான அருண்பிரசாத் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அதில், மணீஸ்வரராஜாவும் கலந்து கொண்டார்.
அப்போது மணீஸ்வரராஜா, அருண்பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில், "மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியது. நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 12 இலட்சத்து 13 ஆயிரத்து 610 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 326 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் பி வகுப்பில் இருந்து ஏ வகுப்பிற்கு தரம் உயர உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக பாஸ்போர்ட் சம்பந்தமான குறைகளை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வாட்ஸ்–அப் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுதவிர பாஸ்போர்ட் சார்ந்த சந்தேகங்கள், குறைகள் மற்றும் விண்ணப்பத்தின் நிலையை அறிய சுலபமான தொழில்நுட்பம் என வரப்பட்டது. இதன் மூலம் பாஸ்போர்ட் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. இதற்காக அவர்கள் இடைத்தரகர்களை அணுகி பல்வேறு இன்னல்களை பெற்றனர். தற்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாகி உள்ளோம்.
இதற்கு முன்பு காவலாளர்கள் விசாரணை அறிக்கை கிடைத்து சுமார் 100 நாட்கள் கழித்துதான் பாஸ்போர்ட் பெற முடியும். தற்போது காவலாளர் விசாரணையை துரிதப்படுத்தி 21 நாட்களில் பாஸ்போர்ட்டை வழங்கி வருகிறோம். இந்த நாட்களையும் குறைக்க உள்ளோம்.
மேலும், முதன்முறையாக ஸ்கைப் மூலம் மக்கள் பாஸ்போர்ட் சம்பந்தமான குறைகளை பற்றி தெரிந்து கொள்ளும் முறையை உருவாக்கி உள்ளோம். அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் நெல்லை மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் ஸ்கைப் மூலம் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
விளையாட்டு வீரர்கள், மாணவர்களுக்கு உடனுக்குடன் பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக சர்வதேச அளவில் விளையாட்டிற்கு செல்லும் மாணவ–மாணவிகளுக்கு ஒரே நாளில் பாஸ்போர்ட் வழங்கி உள்ளோம்.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆரம்பத்தில் பிறப்புச்சான்றிதழ் தேவை என்று இருந்தது. தற்போது அது தேவையில்லை. போலி பாஸ்போர்ட் என்பது தற்போது கிடையாது. ஆனால், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெறுவதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், காரைக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதி மக்கள் வசதிக்காக அங்குள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை அடுத்தாண்டு முதல் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.