
வறட்சியால் வாடும் விவசாயிகளிடம் பயிர்க்கடனுக்காக வங்கிகள் ஜப்தி செய்வதை தடுத்து நிறுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் பிரதான வாசல் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார்.
வறட்சியால் வாடும் விவசாயிகளிடம் பயிர்க்கடனுக்காக வங்கிகள் ஜப்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,
திருச்சி மாவட்டத்தில் இலவச மின்சார திட்டத்தில் மின் இணைப்புக் கேட்டு கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
இந்தாண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலையில் மோட்டார் பம்பு செட் மூலமாவது நெல் சாகுபடி செய்யலாம் என நினைக்கும் விவசாயிகள் அதற்கும் வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.
எனவே, நிலத்தடி நீராதாரத்தை நம்பி நெல் சாகுபடி செய்வதற்கு வசதியாக இலவச மின்சார திட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணாப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் தர்மலிங்கம், கோவிந்தன், ஒன்றியத் தலைவர்கள் சுப்பிரமணியன், காசிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் முடிவில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.