தேனி அரசு மருத்துவமனையில் காலியாகவுள்ள 70 பணியிடங்களை நிரப்ப வேண்டி விசிகவினர் மனு…

First Published Jun 20, 2017, 8:21 AM IST
Highlights
The petitioner requested to complete 70 vacancies in Theni Government Hospital.


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள 70 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மேலும், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்று மனுக்கள் கொடுக்கப்பட்டன.

மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் கொடுத்த முதல் மனுவில், “தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிப்பிடம் சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. மருத்துவமனை வளாகம் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது.

தனியார் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. துப்புரவு பணியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற சுமார் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்பாட்ஷா அளித்த இரண்டாவது மனுவில், “தேவதானப்பட்டி பேரூராட்சி, ஆறு முதல் ஒன்பதாவது வார்டுகள் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் சாக்கடை கலந்து அசுத்தமாக இருக்கிறது. குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

அக்கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் ஜாபர்சேட் அளித்த மூன்றாவது மனுவில், ‘பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் சாக்கடை, மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். திருட்டை தடுக்க இரவு சுற்றுப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

 

tags
click me!