
திருவாரூர்
திருவாரூரில் 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் 80 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து, பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. ஆனாலும், திருவாரூர் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.
தற்போது பெருமளவு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்களின் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.