
தலைவர் மட்டும் கட்சி, கொடியை அறிவிக்கட்டும் அப்புறம் பாருங்களேன், அவர் கட்சியை அறிவித்த பின்னர், மற்ற அரசியல்வாதிகளுக்கு தலை சுற்றும்; விரைவில் அரசியல் சுத்தமாகும், எளிமையாக இருக்கும் என ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சிலேயே வெளுத்துக் கட்டினார்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மதுரை அழகர்கோவில் அருகே ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஆன்மீக அரசியல் வேறு, மதவாத அரசியல் வேறு என்றார்.
ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று தெரியாமல் பேசுகிறார்கள். நாம் நம் மனசாட்சிப் படி நடந்தாலே போதும். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி உண்மையான நேர்மையான அரசியலில் ஈடுபடுவதே ஆன்மீக அரசியல் என்று கூறினார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் கூறுவதைக் கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால் போதும், அவர் கோட்டையைப் பிடிப்பது உறுதி என பேசினார் ராகவா லாரன்ஸ்.