
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் உள்ளது. இங்கே சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது, கணக்கு நோட்டு வைத்து வழிபடப்பட்டது. இதனால் இந்த ஆண்டு என்ன நடக்குமோ என்று பக்தர்களிடன் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்து உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். இது, அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சிறப்பை உடையது. சிவன் மலை சிவன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அதன் பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்புறம் உள்ள கல் தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து மூடி, பக்தர்கள் வெளிப்படையாகப் பார்க்கும் வகையில் அமைத்து விடுவார்கள்.
இங்கே இந்த சிறப்பு பூஜைக்காக, என்ன மாதிரியான பொருளை வைக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் தேர்வு செய்வது கூட சுவாரஸ்யமானதுதான். சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி யாரேனும் ஒரு பக்தரின் கனவில் வந்து, இந்த வருடம் இந்தப் பொருளைத்தான் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவு இடுவாராம். அவர் கோயிலில் தெரிவிப்பார். அதன் பின்னர் வேறொருவர் கனவில் வந்து, அடுத்த பொருள் குறித்துக் கூறும் வரையில், முதலில் வைக்கப் பட்ட பொருளே அந்தக் கண்ணாடிப் பேழையில் பூஜையில் இருக்கும். இவ்வாறு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப் படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும், அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இவ்வாறு வைக்கப் பட்ட பொருளுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. இதனால், பக்தர்கள் இதனை தீவிரமாக நம்புகின்றனர். பக்தர்கள் கனவில் இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டுப் புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்புச் சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. அவற்றை இங்கே பூஜையில் வைத்து கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மே 3 முதல் நேற்று முன்தினம் வரை, உலக உருண்டை வைக்கப்பட்டிருந்தது. உலக உருண்டை வைத்தது முதல், வட கொரியா, அமெரிக்கா இடையே பதற்றம் எழுந்தது. முன்னர் பெட்டியில் துப்பாக்கி வைத்த போது, கார்கில் போர் ஏற்பட்டது. இந்நிலையில், கணக்கு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வருடத்தில் முறையன கணக்கு வழக்கு விவகாரம் தலைதூக்கும், பினாமி சொத்துகள் மீட்கப்படும் என பக்தர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் தெப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மலர்விழி என்ற அன்பரின் கனவில் கணக்கு நோட்டு வந்ததாம். இதை அடுத்து, சனிக்கிழமை நேற்று, கணக்கு நோட்டு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்தக் கணக்கு நோட்டு அங்கிருந்து எடுக்கப்பட்டு, நடுவில் இருக்கும் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் புதிதாக எந்தத் தொழில் தொடங்கினாலும் முதலில் கணக்கு எழுதித்தான் தொடங்குவோம். தற்போது கணக்கு நோட்டு வந்துள்ளதால், அதை வைத்து பூஜிக்கப்படும். இதனால், நாட்டில் நல்ல மழை பெய்து தொழில் வளம் பெருகும். அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன என்று உறுதியுடன் கூறுகின்றனர். மேலும், அரசின் நடவடிக்கைகள் பலமாக இருக்கும் என்றும் அச்சத்தில் கூறுகின்றனர்.
இதற்கு முன் 2015 அக்டோபர் 10ஆம் தேதி திருப்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் கனவில் கணக்கு நோட்டு வந்ததாகக் கூறப்பட்டு, அதை வைத்து பூஜை செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது இரண்டாவது முறையாக கணக்கு நோட்டு வைக்கப்பட்டுள்ளது.