
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, ஆவடி பேருந்து நிலையத்தில் சுவரில் மோதியது. இதைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்காலிக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 77ஆம் எண் பேருந்து, ஆவடி பணிமனைக்குள் நுழைந்தபோது, கட்டுப்பாடு இல்லாமல் அந்தப் பேருந்து சுற்றுச் சுவரில் மோதியது. இந்தப் பேருந்த தற்காலிக ஓட்டுநர் கவிக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதைக் கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது போல், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் மூன்று விபத்துகள் நேர்ந்துள்ளதாக நேற்று கூறப்பட்டது. பண்ருட்டியில் இருந்து தற்காலிக ஓட்டுநர் ஒருவர் கடலூரை நோக்கி ஒரு பேருந்தை ஓட்டி வந்தார். அந்தப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.
பல இடங்களில் பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்கள் வெறிச்செனக் காணப்பட்டன. இருந்தாலும் கிடைக்கின்ற நபர்களை வைத்து பேருந்துகளை பணிமனை மேலாளர்கள் இயக்க வற்புறுத்தி வருகின்றனர்.