
விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 10–ஆம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பாரதிய கிசான் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பாரதிய கிசான் சங்க மாநில தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் பெருமாள், தேசிய செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு செயலாளர் தினேஷ்குல்கர்னி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:
“விவசாய விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்தல், தேசிய நதிநீர் இணைப்பு, தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தாதது, விளை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை, தேசிய விதைச் சட்டம், உலகமயமாக்கலால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 39 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்களை ஏற்கனவே சீரமைத்து ஆழப்படுத்தி இருந்தால், தற்போது உள்ள வறட்சியை தடுத்து இன்னும் 2½ ஆண்டுகளுக்கு தேவையான நிலத்தடி நீரை பெற்றிருக்க முடியும்.
“மாவட்டம் தோறும் விவசாய விளை பொருட்களை பதப்படுத்தும் குடோன் அமைக்க வேண்டும்,
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும்,
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் மாதம் 10–ஆம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள பாரதிய கிசான் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இறுதியில், செய்தி தொடர்பாளர் வீரசேகரன் நன்றித் தெரிவித்தார்.