ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் திட்டம் மத்திய அரசின் சூழ்ச்சி…

First Published Dec 22, 2016, 11:29 AM IST
Highlights


தமிழ்நாட்டின் காவிரி உரிமைச் சிக்கலை மீண்டும் தொடக்க நிலைக்கே அனுப்பி வைக்கும் சூழ்ச்சிதான் மத்திய அரசின் ஒற்றை தீர்ப்பாயம் திட்டம் என்று தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்:

அதில், “மாநிலங்களுக்கு இடையில் உள்ள தண்ணீர் சிக்கலைத் தீர்த்து தீர்ப்புரைக்க இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு தீர்ப்பாயம் அமைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்போது தற்போதுள்ள காவிரி தீர்ப்பாயம் கலைக்கப்படும். காவிரி தீர்ப்பாயத்தை கலைத்துவிட்டு அதன் இறுதி தீர்ப்பை குப்பையில் வீசிவிட்டு புதிய சமரசப் பேச்சை கர்நாடகத்துடன் தமிழ்நாடு தொடங்க கட்டளையிட வேண்டும் என்ற சூழ்ச்சித் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுள்ளது மத்திய அரசு.

எனவேதான், உச்சநீதிமன்றம் கட்டளையிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்திருக்கிறது என்ற உண்மை வெளிவந்துள்ளது.

புதிய தீர்ப்பாயத்தில் கர்நாடக அரசு ஒரு மனு போட்டால், அது சமரசத் தீர்வுக் குழுவுக்கு அனுப்பப்படும். சமரச தீர்வுக் குழு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசும், அந்தப் பேச்சுக்கு காலவரம்பு விதிக்கவில்லை.

தமிழ்நாட்டின் காவிரி உரிமைச் சிக்கலை மீண்டும் தொடக்க நிலைக்கே அனுப்பி வைக்கும் சூழ்ச்சிதான் மத்திய அரசின் ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கும் திட்டம்.

எனவே, மத்திய அரசு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!