பத்து வருடங்களாக விபத்து இழப்பீடு தராமல் ஏமாற்றிவந்த புதுச்சேரி அரசுப் பேருந்து பறிமுதல்…

First Published Dec 22, 2016, 11:19 AM IST
Highlights


பத்து வருடங்களாக விபத்து இழப்பீடு தராமல் ஏமாற்றிவந்த புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின்படி கடலூரில் புதன்கிழமை அன்று பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (39), தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 30-4-2006 அன்று மோட்டார் சைக்கிளில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.

அனுமந்த் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து மோதியதில் பார்த்திபன் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, விபத்து இழப்பீடு கோரி பார்த்திபன், கடலூர் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில் “பாதிக்கப்பட்ட பார்த்திபனுக்கு, புதுச்சேரி மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.4.31 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று உத்திரவிடப்பட்டது.

ஆனால், இதுநாள் வரைக்கும் பார்த்திபனுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் “வட்டியுடன் சேர்த்து ரூ.6.63 இலட்சம் வழங்கிடவும், பணம் வழங்கவில்லை எனில் பேருந்தை பறிமுதல் செய்திடவும் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

இதனையடுத்து, கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த புதுச்சேரி மாநில அரசுப் பேருந்தை, கடலூர் நீதிமன்ற ஊழியர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்து நீதிமன்றத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

click me!