
தூத்துக்குடி
தூத்துக்குடியில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைச் செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும காவலாளர்காள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஆனால், பதுக்கி வைத்திருந்தவர் எஸ்கேப் ஆனார்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவலாளர்கள், “தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுகிறதா?” என்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள பீர்முகமது (45), வீட்டில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவலாளர்களுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளார் ஜானகிராமன் மற்றும் காவலாளர்கள் பெரும்படையுடன் பீர்முகமதுவின் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது, பீர்முகமது வீட்டில் இல்லை. ஆனாலும் காவலாளர்கள் வீட்டில் சோதனை செய்ய முற்பட்டனர்.
சோதனையில் வீட்டின் மொட்டை மாடியில் சுமார் 60 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து கிடைத்த தக்வல் உண்மைதான் என்பதை நிரூபித்தனர்.
பின்னர், காவலாளர்கள், அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். விசாரணை தொடர்கிறது.