
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மின்னல் வேகத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கிவீசப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ளது மெய்த்தலைவன்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் மாரிமுத்து (50).
இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு, இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கரச் சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில், மாரிமுத்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் மோதிய பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் சுக்கு நூறாக நொறுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்ததும், கயத்தாறு காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். பின்னர், இறந்த மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரிமுத்துவுக்கு இராமலட்சுமி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், பானுபிரியா என்ற மகளும் உள்ளனர்.