
திருவாரூர்
ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
தீர்ப்பாய சட்ட முன்வடிவத்தை திரும்ப பெற வேண்டும்.
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கருகிய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்போகிறோம் என்று காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்தது.
அதன்படியே, சொன்ன வார்த்தை தவறாமல் நேற்று திருவாரூர் இரயில் நிலையத்தில் காவிரி உரிமைமீட்புக் குழுவினர் தண்டவாளத்தில் அமர்ந்து தங்களது போராட்டத்தை செவ்வண்ணமே தொடங்கினர்.
இந்தப் போராட்டத்திற்கு நகர பொறுப்பாளர் கலைச்செல்வன் தலைமைத் தாங்கினார்.
அப்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்” என்றும் “ஒற்றை தீர்ப்பாயத்திற்கு வேண்டாம்” என்று கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்
இதனைத் தொடர்ந்து இரயில் மறியலில் ஈடுபட்ட 51 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்து வழக்கம்போல மாலையில் விடுவித்தனர்.